திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.72 திருநீலக்குடி - திருக்குறுந்தொகை
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிறிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.
1
செய்ய மேனியன் றேனொடு பால்தயிர்
நெய்ய தாடிய நீலக் குடியரன்
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங்
கையி லாமல கக்கனி யொக்குமே.
2
ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீலக் குடியுடை யானடி
போற்றி னாரிடர் போக்கும் புனிதனே.
3
நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன் நீலக் குடியுறை நின்மலன்
கால னாருயிர் போக்கிய காலனே.
4
நேச நீலக் குடியர னேயெனா
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே.
5
கொன்றை சூடியைக் குன்ற மகளொடும்
நின்ற நீலக் குடியர னேயெனீர்
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே.
6
கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே.
7
அழகி யோமிளை யோமெனு மாசையால்
ஒழுகி ஆவி உடல்விடல் முன்னமே
நிழல தார்பொழில் நீலக் குடியரன்
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.
8
கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள்
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன்
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.
9
தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னாருட லாங்கோர் விரலினால்
நெரித்து நீலக் குடியரன் பின்னையும்
இரக்க மாயருள் செய்தனன் என்பரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com